பெண்களே உஷார்.. இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் போடும் பெண்களை குறிவைத்து மிரட்டும் இளைஞர்!!

 
VK Puram

இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் போடும் பெண்களை குறிவைத்து மிரட்டும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் அழகுக்கலை நிபுணராக உள்ளார். இந்த நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அவருக்கே அனுப்பி உள்ளார்.

பின்னர் அந்த நபர் வீடியோ கால் செய்து ஆபாசமாக பேசியும், பாலியல் ரீதியான துன்புறுத்தலும் கொடுத்தும் வந்துள்ளார். அடிக்கடி போன் செய்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததால், விரக்தி அடைந்த அந்தப் பெண், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.

Instagram

புகாரை பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் போலீசார், இந்த வழக்கை பதிவு செய்து விசாரிக்க தொடங்கினர். அப்போது, மர்ம நபரின் தொலைபேசி எண்ணைக் கொண்டு, அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன், மர்மநபரை தீவிரமாக தேடி வந்தனர். அதில், இளம்பெண்ணுக்கு ஆபாசமான குறுஞ்செய்தி மற்றும் வீடியோ கால் செய்த நபர், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் சேர்ந்த பிரதீப் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த செல்போன் மற்றும் 4 சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பிரதீப் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருபவர் என்றும், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் இளம்பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து, அவர்களுக்கே அனுப்பி, பாலியல் இச்சைக்கு இணங்கும் படி மிரட்டல் விடுத்து வந்ததும் தெரியவந்தது. மேலும், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல இளம்பெண்களுக்கு பிரதீப் தொலைபேசி மற்றும் வீடியோ கால் வழியாக மிரட்டி வந்ததும் போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

arrest

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், உடனடியாக பிரதீப் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களை பயன்படுத்தும் இளம் பெண்கள், பிரைவேசி செட்டிங்கை எனேபிள் செய்து வைக்குமாறும், முன்பின் தெரியாத நபர்கள் சமூக வலைத்தளங்களில் அனுப்பும் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்ப வேண்டாம் எனவும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெண்களுக்கு ஆபாச மிரட்டல்கள் ஏதும் இருக்கும் பட்சத்தில். எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்திட வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

From around the web