கள்ளக்குறிச்சி கலவரம்: 2 நாட்களுக்கு முன்பாகவே 10 முறை எச்சரித்த மாநில உளவுத்துறை!!

 
Kallakuruchi

கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகத்தை மாநில உளவுத்துறை எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி (17). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து, தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது.

Kallakuruchi

இந்த நிலையில், கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஜூலை 17-ம் தேதி கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகத்தை மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது. மாணவ அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் சேர்ந்து பள்ளியை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது என ஜூலை 15-ம் தேதியே உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்த கலவரத்திற்கு 2 நாட்களுக்கு முன்பே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் மாவட்ட காவல்துறை இந்த எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இதனை வழக்கமான ஒன்றாக எடுத்துக் கொண்டு அலட்சியமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.

kallakuruchi

இந்த விவகாரம் தற்போது மாவட்ட காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் இடையே பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்டதாலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் இந்த கலவரம் ஏற்பட்டதாக மாவட்ட காவல்துறைக்கு எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் உளவுத்துறை கொடுத்த அறிக்கையை, சிறப்பு காவல் ஆய்வாளர் மாவட்ட எஸ்.பி.யிடம் உரிய முறையில் கவனத்திற்கு கொண்டு சென்றாரா என்பன குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

From around the web