ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழப்பு... நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

 
MKS

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்தாண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது.

பொங்கல் விழாவுக்குப் பிறகு உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

Pudukottai-jallikattu

இந்த நிலையில் புதுக்கோட்டை, சிவகங்கை, தர்மபுரி மாவட்டங்களில் நடந்த ஜல்லிக்கட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், கே.ராயவரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த கணேசன் (வயது 58), சிவகங்கை மாவட்டம், சிராவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த பூமிநாதன் (வயது 52) மற்றும் தர்மபுரி மாவட்டம், தடங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை சேகரிக்கும் இடத்தில் நின்றிருந்த கோகுல் (வயது 14) ஆகியோரை போட்டியில் பங்குபெற்ற காளைகள் எதிர்பாராத விதமாக முட்டியதால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையுற்றேன்.


இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் மூன்று லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

From around the web