இப்படியும் ஒரு முதல்வர்! புகழ் பரப்பும் பழைய மாணவர்கள்!!

 
RKS

தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில் உள்ள  திருச்செந்தூர் என்றவுடன் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று என்பது தான் பொதுவாக அனைவருக்கும் நினைவில் வரும். ஆனால் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்களும்,  அங்கே பணி புரிந்தவர்களும்  முன்னாள் முதல்வர் டாக்டர்.இரா.கனகசபாபதியைத் தான் இன்னமும் தங்கள் நினைவில் முதன்மையாக வைத்துள்ளார்கள். 

தினத்தந்தி நிறுவனர், முன்னாள் சபாநாயகர், அமைச்சர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், மிகவும் பின் தங்கிய பகுதியாக விளங்கிய திருச்செந்தூரில் ஒரு கலைக் கல்லூரியை 1965ம் ஆண்டு நிறுவினார். அந்த வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு கல்லூரிப் படிப்பு கிடைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கம்.

ஒரு கல்லூரியைக் கட்டிவிட்டால் மட்டும் போதாதே! திறமையான ஆசிரியர்களும் அவர்களை திறம்பட வழிநடத்துவதற்கு கல்லூரி முதல்வரும் சரியாக அமைய வேண்டும் அல்லவா!. அதற்காகவே விருதுநகர் / சிவகாசி கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர்.இரா.கனகசபாபதி ஆதித்தனார் கல்லூரி முதல்வராக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார். அவர் வணங்கும் திருச்செந்தூர் முருகப்பெருமானின் திருவிளையாடலாகக் கூட இருக்கலாம். 1966ம் ஆண்டு துணை முதல்வராக சேர்ந்தவர் 1967ம் ஆண்டே கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். முருக பக்தரான டாக்டர்.இரா.கனகசபாபதி முழுமையான காந்தியவாதியும்  ஆவார். சாதி சமய வேறுபாடில்லாமல்  ஆசிரியர்களையும், அலுவலர்களையும், அனைத்து மாணவர்களையும் ஒன்றாக அரவணைத்து, சமத்துவமாக வழி நடத்தி அவர்கள் வாழ்வை மேம்படுத்திய வகையில் அவருக்குள் ஒரு பெரியாரையும் காண முடியும்,

கல்லூரியை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், அங்கே படித்த ஒவ்வொரு மாணவருடைய வாழ்க்கை மேம்படவும் தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார் டாக்டர்.இரா.கனகசபாபதி. வேறு பல வாய்ப்புகள் வந்த போதிலும், ஓய்வு பெறும் வரையிலும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்களுக்காகவே பணியாற்றினார். பின்னர் தமிழ்நாட்டின் முதல் ஐ.ஏ.எஸ் அகடமியை மதுரையில் தொடங்கி, பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

டாக்டர் இரா.கனகசபாபதி தன் 26 ஆண்டு கால முதல்வர் அனுபவங்களையும் Developing A College in a Backward Area என்ற நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார். யோகா ஒரு வாழ்க்கைக் கலை என்ற நூலையும் தமிழில் எழுதி உள்ளார்.

933ம் ஆண்டு பிறந்த டாக்டர். இரா.கனகசபாதி 2003ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி  இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அவர் மறைந்து 19 ஆண்டுகள் ஆனாலும் கூட, ஒவ்வொரு ஆண்டும் டாக்டர். கனகசபாபதியின் நினைவு நாளில் அவருடைய பழைய மாணவர்களும், உடன் பணி புரிந்தோரும் அஞ்சலி செலுத்தி தங்கள் அன்பைப் பொழிந்து வருகின்றனர்.

டாக்டர் இரா.கனக சபாபதி அவர்களைப் பற்றி அவருடன் பணியாற்றிய போராசிரியர் டாக்டர் மா.பா.குருசாமி “தனித்துவ மிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி” என்ற நூலையும், மதுரையைச் சார்ந்த முன்னாள் மாணவர்கள் “கலங்கரை விளக்கம்” என்ற தலைப்பில் ஒரு நூலையும்,  க.கார்த்தீசன் “முன்மாதிரியான முதல்வர் கனகசபாபதி” என்ற நூலையும், எழுதி டாக்டர் இரா.கனகசபாபதியின் நினைவுகளை நிரந்தரப் படுத்தி உள்ளனர்.

கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், நலம் விரும்பிகள் விரும்பி தாமாக முன்வந்து மதுரை காந்தி மியூசியத்தில் ரூ5,00,001/-  வைப்புநிதி உருவாக்கி  முதல்வர் இரா.கனகசபாபதி அறக்கட்டளையை நிறுவி உள்ளனர். இந்த அறக்கட்டளை ஆண்டு தோறும் மார்ச் மாதம் நினைவுச் சொற்பொழிவு ஏற்பாடு செய்து வருகிறது

வரும் சனிக்கிழமை மார்ச் 12ம் தேதி காலை 11 மணிக்கு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் நூலக அரங்கில் டாக்டர். இரா.கனகசபாபதி நினைவு அறக்கட்டளை சார்பில் நினைவுச் சொற்பொழிவு நடைபெற உள்ளது. பேராசிரியர்.கே.ஆழ்வார், புதுச்சேரி அரசு செயலாளர் எஸ்.டி சுந்தரேசன் ஐ.ஏ.எஸ், முனைவர்.சு.ஆண்டியப்பன். டாக்டர்.பி.ஜெகதீசபாண்டியன்,  முனைவர் எம்.ராமச்சந்திரன், வி,மகாலிங்கம் ஐ.ஆர்.எஸ். முனைவர் சு.முத்துஇலக்குமி, , காந்தி நினைவு அருங்காட்சியம்  செயலாளர் கே.ஆர்.நந்தாராவ், பொருளாளர் மா.செந்தில்குமார் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

"Developing A College in A Backward Area" என்ற டாக்டர்.இரா.கனகசபாபதி எழுதிய ஆங்கில நூலின் இரண்டாம் பதிப்பை அவருடைய புதல்வர்கள் க.அதியமான் மற்றும் டாக்டர்.க.அருள் செந்திலன் வெளியிட கே.பழனிசாமி ஐ.ஐ.எஸ். பெற்றுக் கொள்கிறார். சு. லிங்கபாண்டியன் நன்றியுரை ஆற்றுகிறார். முனைவர் வா.நேரு தொகுத்து வழங்க உள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அறக்கட்டளையும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகமும் இணைந்து செய்துள்ளனர்.

RKS

இன்று மார்ச் 8, செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் திருச்செந்தூர்  பந்தல் மண்டபம் அருகே சரவணய்யர் நடுநிலைப் பள்ளியில் டாக்டர்.இரா.கனகசபாபதிக்கு பழைய  மாணவர்களும் உடன் பணிபுரிந்தவர்களும் நினைவு அஞ்சலி செலுத்துகிறார்கள். அதற்கான அழைப்பிதழில் “கலங்கரை விளக்கத்திற்கு நினைவஞ்சலி” என்றே குறிப்பிட்டுள்ளனர்.

இந்த  ஆண்டு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் பழைய மாணவர் கவிஞர் ச.பொன்மணி தன்னுடைய முதல்வர் டாக்டர்.இரா.கனகசபாபதியை நினைவு கூர்ந்து பாடல் எழுதி இசை அமைத்து பாடியுள்ளார். அந்த காணொலி மாணவர்களிடையே பகிரப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 

ஒரு கல்லூரி முதல்வருக்கு 19 ஆண்டுகளாக தொடர்ந்து நினைவு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள் என்றால்,  அந்த முதல்வரின் சிறப்புகளை வேறு வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்ன? அந்த கல்லூரியில் படித்த மாணவர்களின் வாழ்வில் எத்தகைய முன்னேற்றத்திற்கு அவர் வழி செய்துள்ளார் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

பழைய மாணவர் முனைவர். வா.நேரு 8 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய வா. நேரு: நிகழ்வும் நினைப்பும் :(19) திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர்-டாக்டர் இரா.கனகசபாபதி (vaanehru.blogspot.com)https://vaanehru.blogspot.com/2014/03/blog-post_4737.html என்ற பதிவும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 

From around the web