இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது!

 
Nallakannu

‘தகைசால் தமிழர்’ விருதுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, `தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார் . ஓவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதல்வர் கைகளால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இந்த விருதுடன், பாராட்டுச் சான்றிதழும், பரிசுத்தொகையாக 10 லட்ச ரூபாய் காசோலையும் கையளிக்கப்படும் என தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Nallakannu

இந்நிலையில், இந்தாண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

‘தகைசால் தமிழர்’ விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். நல்லகண்ணுவுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2022 ஆகஸ்ட் திங்கள் 15-ம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவிக்க உள்ளார்.

GO

தமிழ்நாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக விளங்கும் 96 வயதான நல்லகண்ணு, 1925-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். இவர் தன்னுடைய 18 வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நல்லகண்ணு, 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க தலைவராக இருந்திருக்கிறார்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயலாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மத்திய கமிட்டி உறுப்பினராகவும், தேசிய கட்டுப்பாட்டுக்குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.

From around the web