11 மாதங்களில்.. 33 வழக்குகள்.. 141 சிலைகள் பறிமுதல்: தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல் !!

 
Idol-Smuggling-Prevention-Unit-Information

கடந்த 11 மாதங்களில் 141 சிலைகள் கைப்பற்றப்பட்டு, 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிலை கடத்தல் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 80 சிலைகள் கைப்பற்றப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட சிலைகள் மற்றும் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதுவரை 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 141 சிலைகள் மீட்கப்பட்டதுடன் சிலை கடத்தல் தொடர்பாக 44 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பல கோடி மதிப்பிலான தொன்மை வாய்ந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 500 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் சிலை, 4 அடி உயரம் கொண்ட 5 கோடி மதிப்பிலான கஜ சம்ஹார மூர்த்தி சிலை, பத்துத் தலைக்கொண்ட ராவணன் உலோக சிலை, 4 அடி உயரமுடைய சிவன் சிலை உட்பட பல பழமையான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இவை தவிர தொன்மையான சிலைகளை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு மீட்டு கொண்டு வர சட்ட உதவி ஒப்பந்தம் வாயிலாக இரண்டு முன்மொழிவுகளை சிங்கப்பூருக்கும், ஒரு வேண்டுகோளை ஆஸ்திரேலியாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவிலிருந்து இரு தொன்மையான ஞானசம்பந்தர் உலோகச் சிலைகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு தற்போது புது டெல்லியில் இந்திய தொல்லியல் துறை வசம் உள்ளதாகவும், அதேபோல ஆஞ்சநேயர் சிலை ஒன்றும் இந்தியாவிற்கு வந்து கொண்டிருப்பதாகவும் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறப்பாக பணிபுரிந்து பல்வேறு தொன்மையான சிலைகளை மீட்டெடுத்த தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளி ஆகியோர் வெகுமதி வழங்கி சான்றிதழ் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

From around the web