அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.. தமிழ்நாடு அரசு அதிரடி

 
school-dpi

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவுகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி (17). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

school

இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக, அவரவர் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (சிஇஓ) கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

சிஇஓ-வின் அனுமதி பெற்ற பிறகே, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட விவரம் போன்ற எதையும் ஊடகங்களுக்கு சிஇஓ அனுமதியின்றி தெரிவிக்கக் கூடாது. பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விட்டால், சிஇஓ-க்கு முறைப்படி கடிதம் வாயிலாகவும், தொலைபேசியிலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மரத்தடியில் வகுப்புகளை நடத்தக்கூடாது; பள்ளிகளில் தயாரிக்கப்படும் சத்துணவு தரமாக, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? முட்டை நல்ல நிலையில் உள்ளதா? என்பதை ஆசிரியர்கள் தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். பேருந்து மேற்கூரையின் மீது அமர்ந்து மாணவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். பணியாளர்கள் அனைவரும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளிக்கு வர வேண்டும்.

teachers

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது. தங்களின் சொந்த வேலைக்காக மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியே அனுப்பக்கூடாது. ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லும் முன், இயக்கப் பதிவு புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். பள்ளிகள் - பொதுமக்கள் இடையேயான உறவு நல்ல முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்று, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web