பட்டப்பகலில் ஐடி ஊழியர் சம்மட்டியால் அடித்து படுகொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

 
Thadicombu

திண்டுக்கல் அருகே, சொத்து தகராறில் சம்மட்டியால் அடித்து ஐடி ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சென்னம்மநாயக்கன்பட்டி அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ராஜபாண்டி (32). பிசிஏ பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தற்போது இவர், வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வந்தார். ராஜபாண்டியின் தந்தை பாண்டியனின் சகோதரி அய்யம்மாள். இவருக்கும், பாண்டியனுக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக கடந்த 7 ஆண்டுகளாக தகராறு இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஒன்றிய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட முயற்சி செய்து அதற்கான அனுமதியை அய்யம்மாள் பெற்றிருந்தார். பூர்வீக சொத்து என்பதால், அந்த இடத்தில் அய்யம்மாள் வீடு கட்டுவதற்கு ராஜபாண்டி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலையம், திண்டுக்கல் நில அபகரிப்பு போலீஸ் பிரிவில் அய்யம்மாள் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

murder

அப்போது நீதிமன்றத்திற்கு சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக இருதரப்பினரும் போலீசாரிடம் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்து விட்டு சென்றனர். நிலப்பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே அய்யம்மாளின் மகன் சக்திவேல், தனக்கு சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும் எனக்கூறி ராஜபாண்டியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, பயங்கர ஆயுதங்களுடன் சென்று ராஜபாண்டியின் வீட்டை சக்திவேல் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் ராஜபாண்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு சக்திவேல் தனது கூட்டாளிகளுடன் சென்றார். சொத்து பிரச்சினை தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல், தான் வைத்திருந்த சம்மட்டியால் ராஜபாண்டியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் சுருண்டு விழுந்த ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Thadicombu

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார், ராஜபாண்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

சொத்து தகராறில் ஐடி ஊழியர் சம்மட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web