மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவே ‘நான் முதல்வன்’ திட்டம் - அமைச்சர் பொன்முடி

 
Naan-Muthalvan-project-to-increase-student-enrollment

பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவே ‘நான் முதல்வன்’ திட்டம் கொண்டு வரப்பட்டது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டபேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ. கணேஷ், ஊட்டி தொகுதி குந்தா வட்டம் மஞ்சூரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது, “கல்வியும், சுகாதாரமும் என் இரு கண்கள் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த பட்ஜெட்டில் 21 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், இந்த பட்ஜெட்டில் 10 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளும் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகமாக சேருவதில்லை. ஊட்டி பகுதிகளில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருக்கும் 705 மொத்த இடங்களில், 265 இடங்களில் தான் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே ‘நான் முதல்வன்’ திட்டம் கொண்டுவரப்பட்டது. 26 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், 55 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடப் பிரிவு கொண்டு வரப்படுவதோடு, 10 கல்லூரிகளில் பி.எச்.டி படிப்பு கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.

From around the web