மனைவி கண் முன்னே பேருந்தின் சக்கரத்தில் விழுந்து கணவன் தற்கொலை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

 
Coimbatore

கோவையில் பேருந்து நிறுத்தத்தில் மனைவி கண் முன்னே கணவர் பேருந்தின் சக்கரத்தில் விழுந்நு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்ததால் இரண்டு கால்களிலும் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் நேற்று தனது மனைவி மஞ்சுளா (37), தாய் நாச்சம்மாள் ஆகியோருடன் சிங்காநல்லூர் சென்றார். அங்கே ஒரு மருத்துவமனைக்குச் சென்ற பாலமுருகன் கால் வலிக்கு சிகிச்சை பெற்றார். பின்னர் தாய், மனைவியுடன் அரசு நகர பேருந்தில் வரதராஜபுரம் சென்றனர். அங்கு அவர் உள்பட 3 பேரும் பேருந்தை விட்டு இறங்கினர்.

Coimbatore

அப்போது பாலமுருகன் இரண்டு அடி தூரம் நடந்து சென்றார். பின்னர் அவர் திடீரென்று தன் கையில் இருந்த பேக்கை சாலையோரம் வைத்து விட்டு, பேருந்தை நோக்கி ஓடி விழுந்ததாக தெரிகிறது. இதில் பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அவரது மனைவி, தாய் அலறி துடித்தனர். மேலும் பேருந்தில் இருந்த பொதுமக்களும், பஸ் ஸ்டாப்பில் நின்றவர்களும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த வீடியோவில், பாலமுருகன் சாலையோரம் பேக்கை வைத்து விட்டு பேருந்து சக்கரத்தில் விழுவதும் தெரியவந்தது.

இதையடுத்து தற்கொலை வழக்காக கருதி கோவை பீளமேடு போலீசார் வசம் இந்த வழக்கை ஒப்படைத்தனர். இதையடுத்து பீளமேடு போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி, தாய் கண்முன் பஸ்சில் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web