நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிமின் அடக்க தலம் உள்ளது. இங்கு முஸ்லிம் மதத்தினர் மட்டுமல்லாது அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாநிலங்களான கேரள, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று (ஜூன் 23) மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு நாளை (ஜூன் 24) அதிகாலை தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த திருவிழாவை முன்னிட்டு நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 24.06.2022 அன்று வெள்ளி கிழமை ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ‘உள்ளூர் விடுமுறை’ யாகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 02.07.2022 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.