நெஞ்சை உலுக்கும் சோகம்! எஜமானை காக்க உயிரைவிட்ட 5 நாய்கள்... காப்பாற்ற ஓடிய எஜமானரும் பலி!!

 
Madurai

எஜமானரைக் காப்பாற்ற முயன்றபோது, மின்வேலியில் சிக்கி 5 நாய்கள் உயிரிழந்த நிலையில், இளைஞரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (35). கூலி தொழிலாளியான இவர் 5 வேட்டை நாய்களை வளர்த்து வந்தார். அதனை வைத்து காட்டு பகுதிக்கு சென்று வேட்டையாடுவதிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணிக்கம் தன்னுடைய 5 வேட்டை நாய்களை அழைத்து கொண்டு அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யன கவுண்டன்பட்டி கிராமத்தில் இருக்கும் காட்டு பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். 

electric fence

அந்த இடத்தில் அய்யன கவுண்டன்பட்டியை சேர்ந்தவர்களின் தோட்டங்கள் இருக்கிறது. அசோக்குமார் என்பவர் தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் சம்பங்கி பூக்கள் பயிரிட்டு இருந்தார். அதனுள் வன விலங்குகள் எதுவும் புகுந்துவிடக்கூடாது என்பதற்காக சம்பங்கி பூக்கள் பயிரிடப்பட்டிருந்த இடத்தை சுற்றி மட்டும் மின்வேலி அமைத்து இருக்கிறார். சாதாரணமாக பார்த்தால் உடனடியாக தெரியாத வகையில் மின்வேலி மிகவும் மெல்லிய கம்பியை பயன்படுத்தி சிறிதாக அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த மின்வேலியை கண்ட நாய்கள், எஜமானரைக் காப்பாற்ற நினைத்து, மின்வேலியை மிதித்து ஒவ்வொன்றாக துடிதுடித்து இறந்துள்ளன. அப்போது நாய்களைக் காப்பாற்ற முயன்ற மாணிக்கமும், மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Alanganallur-PS

மாணிக்கம் மற்றும் அவரது வேட்டை நாய்கள் இறந்து கிடப்பதை நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் அலங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் மாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தோட்டத்து உரிமையாளரான அசோக்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web