வகுப்பறை பெஞ்சை உடைத்து அட்டகாசம் செய்த அரசு பள்ளி மாணவர்கள்!!!

 
Collector-suspends-10-students-till-May-4

அரசு மேல் நிலைப்பள்ளியில் பெஞ்சை உடைத்து அட்டகாசம் செய்த பள்ளி மாணவர்கள் 10 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ரிக்கார்டு நோட்டு கேட்ட ஆசிரியரை மாணவர்கள் அடிக்க பாய்ந்து ஆபாசமாக பேசி மிரட்டினர். இந்த காட்சிகள் கடந்த 21-ந்தேதி சமூக வலை தளங்களில் வைரலானது. உதவி கலெக்டர் விசாரணை நடத்தி 3 மாணவர்களை சஸ்பெண்டு செய்தார்.

இதைத்தொடர்ந்து, அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியை பாடம் நடத்தும் வேளையில், கடைசி பெஞ்ச் மாணவர்கள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ பதிவு, நேற்று முன்தினம் வைரலானது.

இந்த வீடியோ பதிவுகளின் பரபரப்பு அடங்குவதற்குள், வேலூர் தொரப்பாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவர்கள் பெஞ்ச், டெஸ்க்கினை உடைத்து அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 800 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஏப்.25) செய்முறை தேர்வு தொடங்க உள்ளது.

இதையொட்டி தொரப்பாடி பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நேற்று முன்தினம் மாலை வழக்கமான நேரத்தை விட ஒருமணி நேரம் முன்பாக பள்ளி விடப்பட்டது. ஆனால் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை வீட்டுக்கு செல்லும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர்.

அதன் உச்சகட்டமாக வகுப்பறையில் உள்ள இரும்பு மேசை, டெஸ்க்கு, பெஞ்ச்களை தரையில் போட்டும், காலால் எட்டி உடைத்தனர். இதைக்கண்ட ஆசிரியர்கள் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் போலீசார் பள்ளி வளாகத்துக்குள் வந்தனர்.

இதைக்கண்ட 12-ம் வகுப்பு மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 12-ம் வகுப்பு மாணவர்கள் டெஸ்க்கு, பெஞ்ச்களை உடைக்கும் காட்சிகள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. பள்ளியில் பிரிவு உபசார விழாவுக்கு தலைமை ஆசிரியர் அனுமதி தராததால் பெஞ்ச், நாற்காலிகளை மாணவர்கள் உடைத்ததாக கூறப்படுகிரது

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் இன்று தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். வீடியோவில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை வழங்கும்படி தெரிவிக்கப் பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்பேரில் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வருங் காலங்களில் மாணவர்கள் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெஞ்சை உடைத்த 10 மாணவர்களளை மே 5-ந் தேதி வரை தற்காலிக நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மாணவ்ர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக்கூடாது. மீறி நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கலெக்டர் அலுவலக விசாரணைக்கு வந்த மாணவர்களுக்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுரை வழங்கினார்.

From around the web