நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை..? அரசு மருத்துமனை மீது தந்தை பரபரப்பு புகார்

 
boy-kavin

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தவறுதலாக சிகிச்சை அளித்ததாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (23). இவரது மனைவி கார்த்திகா. இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு நாக்கு வளர்ச்சி பிரச்சனை இருந்ததாக மதுரையில் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஒரு வருடம் கழித்து மறு பரிசோதனைக்காக அவர்கள் கடந்த 21-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு மீண்டும் குழந்தையைக் கொண்டு வந்தனர். பின்னர் நேற்றைய தினம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் பொழுது சிறுநீர்குழாயில் பிரச்சனை இருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள் நாக்கு மற்றும் சிறுநீர் குழாயையும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

Operation

இந்த நிலையில் மருத்துவர்கள் குழந்தைக்கு தவறுதலாக சிகிச்சை அளித்து விட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்தினர். அந்தப் புகாரில், என்னுடைய மகனுக்கு நாக்குப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக, சிறுநீரக பகுதியில் அறுவை சிகிச்சை செய்துவிட்டனர். இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, மீண்டும் என் மகனை அழைத்துச் சென்று நாக்குப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்தனர். எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், குழந்தை கவினுக்கு வாய்க்குள் நாக்கு ஒட்டிக்கொண்ட பிரச்சினை இருந்தது. இதனால் அந்தக் குழந்தைக்கு கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டான். இந்நிலையில் மீண்டும் அறுவை சிகிச்சைக்காக 2 தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அப்போது, குழந்தை சிறுநீர்ப்பை விரிவடைந்து இருப்பது கண்டறியப்பட்டது.

Madurai

குழந்தையின் சிறுநீரக பகுதியில் முன்தோல் குறுக்கம் இருப்பது தெரியவந்தது. இதனால், மற்றொரு மயக்க மருந்தைத் தவிர்ப்பதற்காக ஒரே அமர்வில் விருத்தசேதனம் மற்றும் நாக்கு ஒட்டுதல் ஆகியவற்றிற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நன்றாக இருக்கிறது. உணவு சாப்பிடுகிறது. சிறுநீர் கழிக்கிறது. குழந்தையின் உடல் நலம் சீராக இருக்கிறது என தெரிவித்தார்.

தவறான அறுவை சிகிச்சை காரணமாக கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில், ஒரு வயது குழந்தைக்கு நாக்கு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ததற்கு பதில் சிறுநீரக பகுதியில் அறுவை சிகிச்சை செய்ததாக மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web