கோபி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம்.. மணமகன் உட்பட மூன்று பேர் கைது!!

 
gobichettipalayam

கோபிசெட்டிபாளையம் அருகே எச்சரிக்கை மீறி 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்ததாக மணமகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். அவருக்கும் கோபிசெட்டிபாளையம் அடுத்த கடத்தூர் புதுக்கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய சிறுமியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

gobichettipalayam

இதுகுறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் ஆலோசகர் ஈரோட்டை சேர்ந்த தீபக்குமார் என்பவர், சிறுமியின் பெற்றோரிடம் குழந்தை திருமணம் செய்வது குற்றம் என கூறி திருமணம் நடத்தக்கூடாது என கூறியுள்ளார். ஆனால், அதையும் மீறிய சிறுமியின் பெற்றோர் கடந்த 2 வாரங்களுக்கு முன் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு கோவிலில் சிறுமிக்கும், சுரேஷ்குமாருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

தகவல் அறிந்த சைல்டு லைன் ஆலோசகர் தீபக்குமார் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் கட்டாய திருமணம் செய்த மணமகன் சுரேஷ்குமார், மணமகனின் பெற்றோர், சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Gobichettipalayam

பின்னர் சிறுமியை கட்டாய திருமணம் செய்த சுரேஷ்குமார் அவரது தந்தை வீரக்குமார், சிறுமியின் தாயார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web