பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவு... முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

 
MKS-Aaroor

தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட வசனகர்த்தா மறைந்த ஆரூர்தாஸின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என தமிழ் சினிமாவின் மறைந்த பல திரை ஜாம்பவான்களின் படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். 1954-ம் ஆண்டு வெளியான ‘நாட்டிய தாரா’ படத்தின் மூலம் சினிமாவில் வசனகர்த்தாவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘சத்தியவான் சாவித்திரி’ தெலுங்கு படத்திற்கு வசனம் எழுதினார். தமிழில் 1959-ம் ஆண்டு வெளியான ‘வாழ வைத்த தெய்வம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த நிலையில் பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் சென்னை திநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (நவ. 20) மாலை காலமானார். அவரது இல்லத்திற்கு இன்று (நவ. 21) நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் திமுக எம்.பி. ஆ.ராசா மற்றும் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் ஆரூர்தாஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

Aaroor Dass

91 வயதான ஆரூர்தாஸ், கடந்த சில ஆண்டுகளாகவே முதுமையின் காரணமாக அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் முதுமையின் காரணமாக நேற்று காலமானார். மறைந்த ஆரூர்தாஸின் உடல் இன்று மந்தைவெளி பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், “திருவாரூர் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் முதுமை காரணமாக மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது சொந்த ஊரான திருவாரூருடன் இயற்பெயரான ஏசுதாஸின் பிற்பாதியை இணைத்து ஆரூர்தாஸ் எனப் பெயர் வைத்துக் கொண்டு தான் பிறந்த மண்ணைப் பெருமைப்படுத்தியவர் ஆரூர்தாஸ் அவர்கள்.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரது பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய இவர், பாமரமக்கள் மனதிலும் ‘பாசமலர்’ திரைப்பட வசனங்கள் மூலம் நீங்கா இடம் பெற்றிருப்பவர். அவரது கலைச்சேவையைப் பாராட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.

MKS

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை இந்த ஆண்டு ஜூன் 3-ஆம் நாள் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் ஆரூர்தாஸ் அவர்களின் இல்லத்துக்கே சென்று வழங்கி மகிழ்ந்தேன்.

தன் வசனங்களின் மூலம் திரையுலகை ஆண்ட அவர் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும், அவர் ஆற்றிய கலைப்பணிகள் என்றென்றும் தமிழ் திரையுலகிலும், படங்களை பார்த்து ரசித்த நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும். கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலை உலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

From around the web