புதையல் எடுக்க பெண் குழந்தையை நரபலி கேட்ட போலி ஜோசியர்... அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!

 
salem

சேலத்தில் புதையல் எடுக்க முதல் பெண் குழந்தையை ஜோசியர் நரபலி கொடுக்க சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கீரிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜோசியர் செல்வராஜ் கீரிப்பட்டிக்கு வந்துள்ளார். அவரிடம் மாரியம்மாள் ஜோசியம் பார்த்துள்ளார். அப்போது இந்த வீட்டில் புதையல் இருக்கு அதை எடுத்தால் நீங்கள் கோடீஸ்வரராகி விடலாம். கொஞ்சம் செல்வு செய்தால் மட்டும் போதும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

செல்வராஜின் ஆசை வார்த்தையில் மயங்கிய தம்பதியினர், புதையல் எடுக்க முதல் தவணையாக ரூ. 6,000 கொடுத்துள்ளனர். அதேபோல் கூகுள் பே மூலம் சிறுக சிறுக ரூ.96 ஆயிரம் வரை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக்கொண்ட செல்வராஜ் புதையலை எடுத்து தர காலதாமதம் செய்து வந்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த தம்பதியினர் ஜோசியர் செல்வராஜை செல்போனில் தொடர்புக்கொண்டு புதையலை எடுத்து தர கேட்டுள்ளனர்.

josiyar

புதையலை எடுக்க வேண்டுமென்றால் நகையை காணிக்கையாக கொடுக்க வேண்டும் இல்லையென்றால் முதல் பெண் குழந்தையை பலி கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஜோசியரின் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர் தங்க நகைகளை காணிக்கையாக தருகிறோம் புதையல் எடுத்து தாருங்கள் எனக் கூறியுள்ளார். இந்த உரையாடல்களுக்கு பின்னர் ஜோசியரை தொடர்புக்கொள்ள முடியவில்லை. எப்போது அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டாலும் சுவிட் ஆப் என்றே வந்துள்ளது.

புதையலை நம்பி ஜோசியரிடம் பணத்தை இழந்ததை உணர்ந்த தம்பதியினர் உடனடியாக இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முருகேஷன் தம்பதி கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய எண்ணை ட்ரேஸ் செய்த போலீசார் இறையமங்கலத்தில் பதுங்கி இருந்த ஜோசியர் செல்வராஜை கையும் களவுமாக பிடித்தனர். ஜோசியரை வாழப்பாடி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபரிடம் இருந்து ரூ. 30,000 ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Valapady-PS

இதுகுறித்து வாழப்பாடி டிஎஸ்பி ஹரி சங்கரி கூறுகையில், “பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்,   யாரும் இனி ஏமாறாதீர்கள். கணவருக்கு தெரியாமல் பணம் யாருக்கும் தரக்கூடாது. கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஜோதிடம் சொல்பவர்களிடமும் புதையல் எடுத்து தருகிறோம் என்று கூறுவோரிடமும் ஏமாறாதீர்கள்” என கேட்டு கொண்டார். புதையல் எடுத்து தருவதாக கூறி தம்பதியிடம் பணத்தையும் பறித்து கொண்டு முதல் பெண் குழந்தையை ஜோசியர் நரபலி கொடுக்க சொன்ன இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web