ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிப்பு!!

 
EVKS-Elangovan

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. 46 வயதான இவர், கடந்த ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருமகன் ஈவெரா மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இதனைத்தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Thirumagan

இதையடுத்து தற்போது, இந்திய தேர்தல் ஆணையமும் இந்த தொகுதியை காலி என்று அறிவித்துள்ளது. தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். பொதுவாக இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 31-ம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழ்நாடு அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.

AICC

இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி மேலிடத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன். நான் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

From around the web