ரீலிஸ் மோகத்தால்.. அருவியில் தவறி விழுந்த வாலிபர்!! தேடும் பணி தீவிரம்

 
ajay-pandiyan ajay-pandiyan

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகநாதசேதுபதி. இவரது மகன் அஜய் பாண்டியன் (28). டிப்ளமோ மெக்கானிக் என்ஜினீயர் படித்துள்ள இவர், திண்டுக்கல் மாவட்டம் மங்களம்கொம்பு பகுதியில் தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி அன்று ராமநாதபுரம் சத்திரத்தை சேர்ந்த அவருடைய நண்பர் கல்யாணசுந்தரம் (25), அஜய் பாண்டியனை பார்க்க மங்களம்கொம்புக்கு வந்தார்.இந்நிலையில் நேற்று ஆடி 18-ம் பெருக்கையொட்டி இவர்கள் 2 பேரும் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றனர். அங்கு அஜய் பாண்டியன் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் நின்று உற்சாகமாக 'போஸ்' கொடுத்தார்.

Ajay-pandiyan

அதனை, கல்யாணசுந்தரம் செல்போனில் பல்வேறு விதங்களில் படம் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அஜய்பாண்டியன், நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் கொஞ்சம், கொஞ்சமாக கீழே இறங்கி 'போஸ்' கொடுத்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், திடீரென பாறையில் கால் வழுக்கி அவர் நீர்வீழ்ச்சிக்குள் தவறி விழுந்து விட்டார்.

கண்ணெதிரே தன்னுடைய நண்பர் நீரில் மூழ்கியதை கண்டு, அதிர்ச்சியடைந்த கல்யாணசுந்தரம் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். ஆனால் யாரும் அங்கு இல்லை. இதனையடுத்து கல்யாணசுந்தரம், புல்லாவெளி பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களிடம் தனது நண்பரை தண்ணீர் இழுத்து சென்று விட்டதாக கூறி கதறி அழுதார். பின்னர் தாண்டிக்குடி போலீசாருக்கும், ஆத்தூர் தீயணைப்புபடையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் அங்கு வந்த ஆத்தூர் தீயணைப்பு மீட்பு பணி அலுவலர்கள் புனிதராஜ், அழகேசன், திண்டுக்கல் தீயணைப்புப்படை நிலைய அலுவலர் மயில் ராசு உள்பட 12 பேர் கொண்ட 2 குழுக்கள் நீர்வீழ்ச்சி பகுதியில் தண்ணீரில் இறங்கி மாலை 4 மணி வரையிலும் தீவிரமாக தேடினர். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாலை 3 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

water

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் மற்றும் போலீசார் பார்வையிட்டனர். ஆனால் தண்ணீரில் மூழ்கிய அஜய் பாண்டியன் கதி என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நீர்வீழ்ச்சி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் அவரை தேட முடியவில்லை. இன்று (ஆக. 4) காலை மீண்டும் அஜய் பாண்டியனை தேடும் பணி தொடங்கும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

From around the web