சும்மா விடாதீர்கள்.. மனைவி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து உரக்கடை உரிமையாளர் தற்கொலை!! சிதம்பரத்தில் அதிர்ச்சி சம்பவம்

 
Chidambaram

சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் மனைவி குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் எலி பெஸ்ட் கலந்து கொடுத்து முந்திரி காட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வாண்டையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த கணேஷ் (45), சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள பொய்யாபிள்ளைசாவடியில் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு அருகிலேயே உள்ள தாயம்மாள் நகரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணேஷ் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்ததில் அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில்  கணேஷ் வீட்டிற்கு திராட்சை பழச்சாறு வாங்கி வந்துள்ளார். பின்னர் குடும்பத்தினருக்கு தெரியாமல் அதில் எலி பேஸ்டை கலந்துள்ளார். பின்னர் அந்த பழச்சாறை தனது மனைவி கல்பனா (32), மகள் சங்கமித்ரா (11), மகன் குருசரண்(9) ஆகியோருக்கு கொடுத்துள்ளார். அதில் கொஞ்சம் விஷம் கலந்த பழச்சாறை தானும் குடித்ததாக தெரிகிறது.

Suicide

இதனையடுத்து கணேஷின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் வாந்தி எடுத்துள்ளனர். இதைப் பார்க்க முடியாத கணேஷ், தனது சொந்த ஊரான வாண்டையாம்பள்ளம் அருகே உள்ள அன்னப்பன்பேட்டை கிராமத்தின் முந்திரி தோப்புக்கு சென்றுள்ளார். பின்னர் தனது செல்போன் மூலம் பு.முட்லூர் கிராமத்தில் உரக்கடை வைத்துள்ள தனது நண்பருக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த மெசேஜை பார்த்த கணேஷின் நண்பர் இதுகுறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேஷின் உறவினர்கள் சிதம்பரம் தாயம்மாள் நகரில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு கல்பனா, அவரது மகள் சங்கமித்ரா, மகன் குரு சரண் ஆகிய 3 பேரும் வாந்தி எடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணேஷின் உடலை கைப்பற்றிய புதுச்சத்திரம் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Puduchattram

இந்த சம்பவம் குறித்து கூறிய கணேஷின் உறவினர்கள், கணேசிடம் ஏராளமானோர் கடன் வாங்கிக் கொண்டு அவரிடம் பணத்தை திருப்பி தராததால் அவர் கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து தீவிர விசாரணை நடத்தி கடன் தர வேண்டியவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க வேண்டும். அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட கணேஷ் கடைசியாக இறப்பதற்கு முன் எழுதிய கடிதங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்தக் கடிதத்தில், தனக்கு யார் யார் பணம் தர வேண்டும் என்ற விபரங்களை எழுதியதோடு, தனது மரணத்திற்கு காரணமானவர்களின் பெயர்களையும் எழுதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web