விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் - அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

 
Ration

விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் என்று உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.

தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் பயன் அடையும் விதத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரேஷன் பொருட்களை தகுதியற்ற நபர்கள் பெற்று கள்ள சந்தைகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வது சோதனையில் கண்டறியப்பட்டது. அதனால் இதனை தடுக்க கூட்டுறவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் முதற்கட்ட நடவடிக்கையாக பயோமெட்ரிக் முறை அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டது. இந்த பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் அனைத்தையும் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை பதிவு செய்த பிறகு விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலமாக ரேஷன் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு வழங்குவது உறுதியாகிறது.

Ration-Shop

ஆனால் இந்த முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகை பதிவு செய்ய முடிவதில்லை. அதனால் ரேஷன் பொருட்களை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு வர முடியாததால், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மின்னணு பதிவேட்டில் கோளாறு ஏற்படுவதால் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் அட்டை தாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார்.

Ration

இந்நிலையில், தமிழ்நாட்டில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க சோதனை நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த நடைமுறை துவங்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு ரேஷன் கடைகளில் கழிவறை வசதிகள் அமைக்கப்படும் என்றும், கடைக்கு வரும் பொதுமக்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

From around the web