திருமங்கலம் அருகே கோயிலில் பாடல் போடுவதில் தகராறு... இளைஞர் வெட்டி கொலை!!

 
Madurai

திருமங்கலம் அருகே ஜாமினில் வெளியே வந்த இளைஞரை, வெட்டி படுகொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் போஸ். இவரது மகன் பாரதிராஜா (35). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சந்தன பாண்டியன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு புதுப்பட்டியில் உள்ள கோவில் திருவிழாவில் பாடல் போடுவது தொடர்பாக பாரதிராஜாவுக்கும், சந்தனபாண்டிக்கும் தகராறு ஏற்பட்டது.

murder

இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் பாரதிராஜாவை கைது செய்ய முயன்றபோது அங்கிருந்து அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் ஜாமீன் பெற்று கடந்த 10-ம் தேதி பாரதிராஜா சொந்த ஊருக்கு வந்துள்ளார். அன்று இரவு புதுப்பட்டியில் உள்ள டீக்கடையில் நண்பர் சரவணகுமாருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பாரதிராஜாவை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

உடனிருந்த சரவணக்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. இவர் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Tirumangalam-PS

விசாரணையில் பாரதிராஜாவை கொலை செய்தது சந்தனபாண்டியும், அவரது நண்பர்களும் என தெரியவந்தது. இதையடுத்து சந்தனபாண்டி, ராமகிருஷ்ணன், கோகுல், பரத், பாக்கியராஜ், விக்கி ஆகிய 6 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 11-ம் தேதி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். மற்ற 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தார்கள். இவர்கள் திருமங்கலம் ரயில் நிலையத்தில் பதுங்கி இருந்த போது போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web