கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம்: பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

 
Kallakurichi

கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

Kallakurichi

இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றையும், போராட்டக்காரர்கள் விட்டுச்சென்ற வாகனங்களில் உள்ள பதிவெண் ஆகியவற்றை கொண்டு ஆள் அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, மாணவியின் மரணம் தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஐந்து பேரும் புதன்கிழமையன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஒருநாள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், நீதிபதி புஷ்பராணி வீட்டில் ஆஜர்படுத்திய பின் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Kallakurichi

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். இன்று விசாரணைக்கு வந்த ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி, 5 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துள்ளார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதால், அதன் அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

From around the web