மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: ஜாமினில் வெளிவந்த பள்ளியின் தாளாளர், ஆசிரியைகள்

 
kallakurichi kallakurichi

சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், பள்ளி நிர்வாகிகள் 3 பேரும், ஆசிரியைகள் 2 பேரும் ஜாமினில் வெளியே வந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

Kallakurichi

மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26-ம் தேதி உத்தரவிட்டார்.

Kallakurichi

பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் ஆசிரியைகள் இரண்டு பேரும் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் ஜாமினில் வெளியே வந்தனர்.

From around the web