திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா? திமுகவில் சலசலப்பு

 
Subbulakshmi

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவில் தலைவர் பதவிக்கு அடுத்து, பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் துணை பொதுச் செயலர் பதவிகள் முக்கியமாக உள்ளன. தற்போது துணைப் பொதுச்செயலாளர் பதவியில் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராஜா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.

இவர் திமுக சார்பில், 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1989-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஈரோடு தொகுதியிலும், 1977, 1996-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மொடக்குறிச்சி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1977-1980-ல் தமிழ்நாடு ஜவுளி, கடை, கைத்தறி, சிறு தொழில்கள், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக இருந்தார். 1989-1991 வரை தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன், பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவியது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

subbulakshmi

தனது தோல்விக்கு ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகள் செய்த சதி செயலே காரணம் என்று கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் திமுக தலைமைக்கு கடிதம் கொடுத்ததாக தெரிகிறது. இருப்பினும் இந்த கடிதத்தின் மீது திமுக தலைவர் ஸ்டாலின் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிருப்தியில் இருந்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. அரசு விழா மற்றும் திமுக நடத்தும் நிகழ்ச்சியில் இவர் புறக்கணிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அண்மையில் விருதுநகரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்கவில்லை. அவரை திமுக புறக்கணித்துவிட்டதாக தவவல் வெளியானது. இதனிடையே, இவரது கணவர் ஜெகதீசன், அண்மையில் சமூக வலைதளங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.

MKS-Subbulakshmi

இந்நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் திமுக தலைமையில் இருந்து எந்த அறிவிப்பும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. சுப்புலட்சுமி ஜெகதீசன் தரப்பும் மௌனம் காத்து வருவதாக கூறப்படுகிறது.

From around the web