ஆவடியில் அதிர்ச்சி சம்பவம்!! பைக்கில் லிப்ட் கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம்!

 
avadi

வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் லிப்ட் கேட்டு வரும்போது ஏற்பட்ட சாலை விபத்தில், இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பட்டாபிராம் தென்றல் நகர் பகுதியில் வசித்து வந்தவர் யோகேஷ். இவர், திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது மோட்டார் பைக்கில் கொரட்டூரில் உள்ள நண்பரை சந்தித்து விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார்.

Accident

பட்டாபிராம் கக்கன்ஜி நகர் பகுதியை சேர்ந்த அஜய் என்பவர், வீட்டிற்குச் செல்வதற்காக அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மோட்டர் பைக்கில் வந்துகொண்டிருந்த யோகேஷிடம், அஜய் லிப்ட் கேட்டு பயணித்து உள்ளார். இருவரும் திருமுல்லைவாயில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5ம் அணி அருகே வேகமாக வந்த போது, திடீரென மோட்டர் பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது.

இதில், பின்னால் இருந்த அஜய் தூக்கி வீசப்பட்டார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டர் பைக்கை ஓட்டி வந்த யோகேஷ், சிறிய காயங்களுடன் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

pattabiram

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், உயிரிழந்த அஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web