இபிஎஸ் வசம் அதிமுக... அலுவலக சாவியை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

 
EPS

 அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதிமுக அலுவலகத்தை ஓ பன்னீர்செல்வம் கைப்பற்றிய நிலையில், அங்கு எடப்பாடி - ஓபிஎஸ் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. அங்கு நடந்த வன்முறையை தொடர்ந்து சட்டம், ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

EPS-OPS

இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 14 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கைதான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் இன்று தீரப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும், தலைமை அலுவலகத்தின் சாவியை கட்சியின் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கவும் தீர்ப்பளித்தது.

EPS

மேலும் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில், ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

From around the web