தறி கெட்டு பாய்ந்த கண்டெய்னர் லாரி.. உடல் நசுங்கி உயிரிழந்த சகோதரிகள்... ஆம்பூரில் சோகம்!

 
Ambur

ஆம்பூர் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் தண்டபாணி. பிளாஸ்டிக் கதவு, ஜன்னல்கள் செய்யும் கடை நடத்தி வரும் இவருக்கு அனுராதா என்கிற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்கள் ஆம்பூர் கோவிந்தபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீவித்யா விஹார் பள்ளியில் ஜெயா ஸ்ரீ (17) 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது 2-வது மகள் வர்ஷா (11) 6-ம் வகுப்பு படிக்கின்றார்.  இருவரும் தினசரி பள்ளி வாகனங்கள் மூலம் பள்ளி சென்று வந்தனர்.

Ambur

நேற்று இவர்கள் பள்ளி வாகனத்தை தவற விட்டதால், தண்டபாணி இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றபோது, ஆம்பூர் ஓ.ஏ.ஆர் தியேட்டர் சிக்னல் அருகே ஓசூரில் இருந்து சென்னைக்கு சென்ற கனரக கண்டெய்னர் லாரி  தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் தந்தை தண்டபாணி படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் படுகாயம் அடைந்த தண்டபாணியை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூரில் தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரண்டு பள்ளி மாணவிகள்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web