விடுதியில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை... மீண்டும் திருவள்ளூரில் பரபரப்பு!

 
Tiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு மாதிராவேடு சாலையில் பெண்களுக்கான தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் விடுதி இயங்கி வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி (19), என்ற மாணவி 2ம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை வகுப்பிற்கு சென்று விட்டு மதிய உணவிற்கு தோழிகளுடன் வந்தவர் தோழிகளை சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டு அறைக்கு சென்றுவிட்டார். பின்னர், நீண்டநேரமாகியும் சுமதி வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தோழிகள் மேலே சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

Tiruvallur

இதையடுத்து கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்த போது சுமதி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சக மாணவிகள் கதவை உடைத்து உள்ளே சென்று சுமதியை மீட்டனர். ஆனால் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுமதியின் உடலை கைபற்றி பிரதே பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பிவைத்தனர். அவரது சுமதியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்ததால் அவர்களும் சம்பவம் நடந்த கல்லூரிக்கு வந்தனர். அங்கு தனது மகள் தற்கொலை செய்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

tiruvallur

மேலும் தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரமா? அல்லது மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா?, கல்லூரி நிர்வாகம் கெடுபிடியா? என பல்வேறு கோணத்தில் திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட சுமதியின் செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் கடிதம் ஏதாவது எழுதிவைத்துள்ளாரா எனவும் ஆய்வு செய்கின்றனர்.

மேலும், அவரது பெற்றோரிடமும் விடுதியில் உள்ள சக மாணவிகளிடமும் போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில்  அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க கல்லூரி முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நர்சிங் மாணவி சுமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பூந்தமல்லி தாசில்தார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்கின்றனர்.

From around the web