குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி ஊட்டிவிட்டு மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 
MKS

1-5 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலமாக 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர். இந்தத் திட்டம் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

MKS

காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சூடான, சத்தான உணவை சமைத்து, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப் பள்ளியில் இன்று காலை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு அவர் காலை உணவை பரிமாறிய முதல்வர், பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.

MKS

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி, ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் மற்றும் எம்எல்ஏ-க்கள், அரசுத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

From around the web