ஹிஜாவு குழுமத்தின் மீது வழக்கு.. அதிக வட்டி தருவதாக கூறி மோசடி!!

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்த புகாரில் மேலும் ஒரு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஹிஜாவு என்ற நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் மாதம் ரூ. 15 ஆயிரம் வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான பேரிடம் பணம் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால் கடந்த சில மாதங்களாக வட்டி தராமல் மோசடி செய்த ஹிஜாவு குழுமத்தின் மீது அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர்.
புகாரின் பேரில் ஹிஜாவு குழுமத்தின் தலைவர் சௌந்தரராஜன் மற்றும் நிர்வாக இயக்குநர் அலெக்சாண்டர் மீதும், இந்த நிறுவனத்தை நடத்திய நிர்வாகிகள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக மலேசியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் கிணறு வைத்திருப்பதாகவும், மக்களிடம் வசூலிக்கும் பணத்தை அந்த நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் பார்ப்பதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் ஒரு லட்சம் பேர் வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது ஹிஜாவு நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவோ, ஈமெயில் மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.