மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

 
sudha-centre-HC

ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டுமென்று தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அளித்த புகாரில், சிறுமியின் தாய் இந்திராணி பணத்துக்காகத் தனியார் மருத்துவமனைகளில் தன்னுடைய கருமுட்டையை விற்பனை செய்ததாகவும், தன் தாயின் 2-வது கணவர் சையத் அலி தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில், அவரின் தாய் இந்திராணி, வளர்ப்புத் தந்தை சையது அலி, இடைத்தரகர் மாலதி, அந்த சிறுமியின் ஆதார் அட்டையை மாற்றிக்கொடுத்த ஜான் ஆகியோரை போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் சிறுமி அளித்த தகவலின்படி ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள சுதா மருத்துவமனை, ஓசுரில் உள்ள விஜய் மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள ராமபிரசாத் மருத்துவமனை மற்றும் திருப்பதில் உள்ள கருத்தரிப்பு மையம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை என 6 மருத்துவமனைகள் கருமுட்டை விவகாரத்தில் ஈடுப்பட்டது என தெரியவந்தது.

Girl-mother

இதையடுத்து இதில் தொடர்புடைய ஈரோடு சுதா மருத்துவமனை, சேலம் சுதா மருத்துவமனை, ஓசுர் விஜய் மருத்துவமனை, பெருந்துறை ராமபிரசாத் மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளை மூட உத்தரவு விடப்பட்டுள்ளது. இங்கு செயல்பட்டு வரும் ஸ்கேன் சென்டர்களை உடனடியாக மூடவும் 15 நாட்களுக்குள் அங்கு சிகிச்சை பெற்று வருவோரை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும்  என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே கருமுட்டை முறைகேடு புகாரில் சிக்கிய மருத்துவமனைக்கு தமிழக சுகாதாரத்துறை சமீபத்தில் சீல் வைத்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கருமுட்டை முறைகேடு புகாரில் சிக்கிய மருத்துவமனைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சிலையை அகற்றவும் குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரித்து 12 வாரங்களில் தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

Karumuttai

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசின் உத்தரவில், விதிகளுக்கு முரணாக செயல்படுவதால் பொதுநலன் கருதி மருத்துவமனையின் பதிவு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கூறி அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், காரணங்கள்தெரிவிக்கப்படவில்லை எனக் கூற முடியாது என தெரிவித்துள்ளனர். கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தனி நீதிபதி புறக்கணித்திருக்க கூடாது எனக் கூறிய நீதிபதிகள், மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

From around the web