குடிபோதையில் பயணிகளை ஆபாசமாக பேசிய சி.ஆர்.பி.எப். வீரர்.. அதிரடியாக கைது செய்த ரயில்வே போலீசார்!!

 
CRPF-soldier-arrested-for-talking-obscenely-to-drunken-passengers

ஓடும் ரயிலில் குடிபோதையில் பயணிகளை ஆபாசமாகப் பேசி தொல்லை கொடுத்த சி.ஆர்.பி.எப் வீரரை எழும்பூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

குருவாயூர் விரைவு ரயிலில் நேற்று பயணம் செய்த வசந்த் என்ற பயணி தாங்கள் பயணம் செய்யும் பெட்டியில் குடிபோதையில் ஒரு நபர் சக பயணிகளான தங்களை ஆபாச வார்தைகளால் திட்டி, தங்கள் மீது எச்சில் உமிழ்ந்து மிகுந்த தொல்லை கொடுப்பதாகவும், உரிய நடவடிக்கை தேவை எனவும் புகைப்பட ஆதாரத்துடன் தெற்கு ரயில்வே மற்றும் தமிழ்நாடு காவல்துறையை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதனை அறிந்த தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் சென்னைக்கு வந்தடைந்த குருவாயூர் விரைவு ரயிலில் உள்ள எஸ்10 பெட்டியை சோதனையிட்ட எழும்பூர் ரயில்வே காவல் துறையினர் அங்கு சக பயணிகளுக்கு தொல்லை கொடுத்து தகாத முறையில் நடந்துகொண்ட நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியைச் சேர்ந்த விபின் (வயது 33) என்பதும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

மேலும், தனது விடுமுறை முடிந்து விபின் பணியில் சேர பயணம் மேற்கொண்டதும், பயணத்தின் போது சி.ஆர்.பி.எஃப் வீரரான விபின் மது அருந்தியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட தகவலை புகார் அளித்த ரயில் பயணி வசந்தின் ட்விட்டர் பதிவின் கீழ் பதில் பதிவாக ரயில்வே காவல்துறை டி.ஐ.ஜி அபிஷேக் தீக்சித் பதிவிட்டுள்ளார். மேலும், ரயில் பயணத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான புகார்களுக்கு எந்த நேரத்திலும் ரயில்வே காவல் துறையினை 99625 00500 என்ற எண்ணை தொடர்புக்கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் ரயில்வே டி.ஐ.ஜி அபிஷேக் தீக்சித் குறிப்பிட்டுள்ளார்.

From around the web