உயிரிழந்த நடத்துனர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்.!

 
CM-stalin-annouced-10-lakhs

சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரத்திற்கு அரசு பேருந்து சென்றது. விழுப்புரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது, மதுபோதையில் பயணி ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார்.

மது போதையில் இருந்த நபரிம் நடத்துநர் டிக்கெட் எடுக்க கூறியுள்ளார். ஆனால் போதை ஆசாமியே டிக்கெட் எடுக்க முடியாது என கூறியதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதை சக பயணிகள் தடுத்தனர். ஆனால், போதை வாலிபர் தாக்கியதில் நடத்துநர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து நடத்துநரை பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மேல்மருத்துவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த நடத்துநர் பெருமாள், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர். அவருக்கு வயது 54. இச்சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் உயிரிழந்த நடத்துநர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி உதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று அதிகாலை 3.15 மணியளவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கிளையைச் சார்ந்த அரசுப் பேருந்து சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வரும்போது, மதுராந்தகத்தில் குடிபோதையில் பேருந்தில் ஏறிய முருகன் என்ற பயணியிடம் நடத்துநர் தி.பெருமாள் பிள்ளை, பயணச்சீட்டு எடுக்க வலியுறுத்திய போது, அந்தப் பயணி நடத்துநரைத் தாக்கியுள்ளார்.

இதன் காரணமாக, நடத்துநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக அவர் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் திரு. தி.பெருமாள் பிள்ளை அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு உடனடியாக பத்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web