மீண்டும் ஒரு ஆணவப்படுகொலை... காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி கொடூர கொலை!! தூத்துக்குடியில் பரபரப்பு

 
Veerapatti

கோவில்பட்டி அருகே வீரப்பட்டியில் காதல் திருமணம் செய்து கொண்ட மகள், அவரது கணவரை பெண்ணின் தந்தையே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த வீரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி முத்துகுட்டி (50). இவர் சொந்தமாக வேன், மினி லாரி வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். இவரது மகள் ரேஷ்மா (20), கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் என்வபரின் மகன் மாணிக்கராஜ் (26). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். உறவினர் மாணிக்கராஜ் என்பவரும் ரேஷ்மாவும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதல் விவகாரம் முத்துகுட்டிக்கு தெரியவரவே, தனது மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வேறு இடத்தில் வரன் பார்த்து திருமண நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி காதலர்கள் இருவரும் தங்களது ஊரில் இருந்து வெளியேறி மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கியிருந்து வந்தனர்.

Veerapatti

இரண்டு நாட்களுக்கு முன்பு புதுமண காதல் தம்பதி இருவரும் சொந்த ஊரான வீரப்பட்டி கிராமத்துக்கு வந்தனர். அங்கு மாணிக்கராஜின் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்த நிலையில், நேற்று காலை மாணிக்கராஜின் தாயார் மகாலட்சுமி, வேலைக்கு சென்று விட்டார். இதனால் புதுமண தம்பதியர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். மாலையில் வேலை முடிந்ததும் மகாலட்சுமி வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டில் அவரது மகன் மாணிக்கராஜூம், மருமகள் ரேஷ்மாவும் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி கதறி அழுதார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது மற்றும் போலீசார், தடயவியல் நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்தனர்.

Veerapatti

இதையடுத்து புதுமண தம்பதியின் உடல்களை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த முத்துகுட்டி ஆத்திரத்தில் தனது மகள், மருமகன் என்றும் பாராமல் அவர்களை அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இந்த பயங்கர இரட்டைக்கொலை குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முத்துகுட்டியை வலைவீசி தேடி வந்த நிலையில் முத்துக்குட்டியை போலீசார் கைது செய்தனர். திருமணமான 26 நாளில் புதுமண தம்பதியை பெண்ணின் தந்தையே வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web