சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து... ஒருவர் பலி! முதல்வர் இரங்கல்

 
Sivakasi

சிவகாசி அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 140 ஆண் பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வட மாநிலங்களில் பண்டிகைகள் வருவதை முன்னிட்டு தற்போது இங்கு பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த ஆலையில் திருத்தங்கல் மேல மாட வீதியைச் சேர்ந்த ரவி (58), சாமுவேல் ஜெயராஜ் ஆகிய 2 பேர் இங்கு வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், பட்டாசு ஆலைக்கு இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த இவர்கள் ஆலையில் உள்ள தனியறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்துகளை தயார் செய்து கொண்டிருந்தனர்.

Sivakasi

அப்போது மருந்துகளுக்குள் உராய்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் தீ பரவி அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவியது. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் அவை வெடிக்க தொடங்கியது. இந்த வெடி விபத்தில் அந்த அறையில் இருந்த ரவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வெடி விபத்தில் சிக்கிய சாமுவேல் ஜெயராஜை மீட்ட வீரர்கள் அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி உதவியும்  அறிவித்துள்ளார்.

MKS

இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம். கீழத்திருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திருத்தங்கல்லைச் சேர்ந்த குருசாமி  என்பவரது மகன் ரவி, (60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.” இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆசீர்வாதம் என்பவரது மகன் சாமுவேல் ஜெயராஜ் (48) என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாயும், காயமடைந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளர்.

From around the web