பள்ளி மாணவர்களுக்கு கோர விபத்து.. அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து!!

 
Pappireddipatti Pappireddipatti

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்ற அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மஞ்சவாடியில் இருந்து அரூர் நோக்கி நேற்று மாலை அரசு நகர பேருந்து சென்றது. இந்த பேருந்தை கூக்கடப்பட்டி பகுதியைச்  சேர்ந்த ஓட்டுநர் சிவக்குமார் (50) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக சின்னாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆதிமூலம் (58) என்பவர் பணியில் இருந்தார். பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமான பயணிகள் இருந்தனர்.

இந்த பேருந்து சேலம் - அரூர் நெடுஞ்சாலை தண்ணீர்தொட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்போது சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்தின் பின்பகுதியும், தனியார் பேருந்தின் முன்பகுதியும் அப்பளம் போல் நொருங்கின. மேலும் அரசு மற்றும் தனியார் பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து அபய குரல் எழுப்பினர்.

Pappireddipatti

இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் வாழப்பாடி பகுதியை சேர்ந்த தொழிலாளி செல்வம் (55), ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்த பர்வீன் (34), பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பட்டதாரி கார்த்திகா (27), காளிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பட்டுகோனாம்பட்டியை சேர்ந்த அபிராமி (16), சுமித் (10), ஹரிதர்ஷனி (11), சந்துரு (9), குமரக்கோட்டம் பகுதியை சேர்ந்த கபிலன் (11), அன்பரசி (9), தமாணிகோம்பை பகுதியை சேர்ந்த மதன் (15), ஸ்ரீவர்மா (14), மகி (14), தர்ஷன் சிவா (14), திருமலை (15), துர்காதேவி (13), குமரக்கோட்டம் பகுதியை சேர்ந்த மனிதா (13) உள்பட 30-க்கும் மேற்பட்டோர் சேலம், அரூர் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Pappireddipatti

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், தாசில்தார் சுப்பிரமணி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இதில் பலத்த காயமடைந்த மாணவர்கள் தர்ஷன் சிவா, திருமலை, துர்காதேவி, மணிதா ஆகியோரை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பட்டுகோணாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிவு செய்து கருக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் பொன்மலையிடம் (40) விசாரணை நடத்தி வருகிறார். அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web