அம்மா மீண்டும் உயிர்த்தெழுவார்... 3 நாட்களாக சடலத்துடன் ஜெபம் செய்த டாக்டர் மகன்கள்!!

 
Madurai

மதுரையில் இறந்த பெண் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் 3 நாட்களாக கணவரும், டாக்டர் மகன்களும் பிரார்த்தனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எஸ்.எஸ்.காலனி ஜானகி நாராயணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (64). இவரது மனைவி மாலதி (55). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு மகன்களில் மூத்த மகன் ஜெய்சங்கர் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், இளைய மகன் சிவசங்கர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.

Madurai

இந்த நிலையில் கடந்த வாரம் மாலதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர், சிகிச்சை பலனின்றி கடந்த 8-ம் தேதி காலை உயிரிழந்துள்ளார். பின், மாலதியின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த குடும்பத்தினர், உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் வீட்டிலேயே குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர்.

இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக நேற்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்தனர். இதனையடுத்து, மீண்டும் அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் வந்து போலீசார் எச்சரித்த பின்னர், மாலதியின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டிற்கு உடலை குடும்பத்தினர் எடுத்துச்சென்றனர்.

SS-Colony-PS

போலீசார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் இது வெளியே தெரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web