சேவல் சண்டைகளுக்கு அனுமதி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 
cock fight

ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் சேவல் சண்டைகளும் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பல்வேறு விதிமீறல்கள் காரணமாக தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது.

cock-fight

இதையடுத்து, ஈரோடு மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கோரி இரண்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

சேவல் சண்டையின் போது சூதாட்டம் நடத்தப்படமாட்டாது, சேவல்கள் துன்புறுத்தப்படமாட்டாது என்று உறுதி அளித்தால் இந்த சேவல் சண்டைக்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சேவல்களை துன்புறுத்தக் கூடாது, போட்டி நடைபெறக்கூடிய இடத்தில் ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும், சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது, சேவல்களுக்கு மது கொடுக்கக் கூடாது, அவற்றின் கால்களில் கத்தி கட்டக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

High-Court

மேலும் இந்த சேவல் சண்டை போட்டியின் போது குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் நீதிபதிகள் நிபந்தனைகளை விதித்திருக்கின்றனர். இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்து இருக்கின்றனர்.

From around the web