குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் கனமழை ஓரிரு இடங்களில் பெய்து வருகிறது. இதன் காரணமாக சாரல் மழை குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முழுவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இந்த சாரல் மழை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இருந்த காரணத்தால் இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு முதல் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
விடுமுறை நாள் என்பதால் வெளியூர்களில் இருந்து குற்றாலத்தில் ஆனந்த குளியல் போடலாம் என்ற எதிர்பார்ப்பில் வந்த பலர் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழையின் அளவு குறைந்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு இன்று குறைந்தது. இதனைத் தொடர்ந்து ஐந்தருவி, குற்றாலம் பிரதான அருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
பழைய குற்றாலம் அருவி பகுதியில் மட்டும் வெள்ளம் குறையாததால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. வானம் மேகமூட்டத்துடன் இதமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதையொட்டி, குற்றாலம் மெயின் அருவி பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.