மின் கட்டணம் செலுத்த ஆதார் கட்டாயம்... மின்சார வாரியம் அறிவிப்பு!

 
EB-Aadhar

மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு அவசியம் என்ற மின்வாரியத்தின் திடீர் நடவடிக்கை பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசிடம் இருந்து மானியம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களுக்கு தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மின் நுகர்வோர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது. 

நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலை கொடுத்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

EB-Aadhar

இதைத்தொடர்ந்து மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து வருகின்றனர். இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மின்சார வாரியம் அறிவித்துள்ள போதிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போர் அவை அனைத்துக்கும் தங்களது ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்வதால் ஏதேனும் சிக்கல் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் பலர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க முன்வருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட மின்வாரியம் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற வகையில் திடீர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முயன்ற மின் நுகர்வோருக்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது குறித்து தெரிவிக்கப்படுகிறது.

EB-Aadhar

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணையவழியிலும், நேரடியாகவும் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்காதவர்களால் மின் கட்டணம் செலுத்த இயலவில்லை. இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 24 முதல் நவம்பர் 30-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்தப் பிரிவு மின்நுகர்வோர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இவ்வாறு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அபராத கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

From around the web