அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் காலமானார்!

 
ADMK

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 76.

கடலூர் அண்ணா நகரில் வசித்து வந்தவர் ஜனார்த்தனன். கடந்த 1972 முதல் 1980 வரை கடலூர் நகர அதிமுக செயலாளராக இருந்த இவர், அதன் பிறகு தலைமை செயற்குழு உறுப்பினராகவும், கடலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும், விழுப்புரம் மாவட்ட செயலாளராகவும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 57 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜனார்த்தனனுக்கு 2 ஆண்டு சிறையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடலூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADMK

இந்த தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டில் நடைபெற்றபோது ஜனார்த்தனனின் விவசாய சொத்துக்கள் மூலம் கிடைத்த வருமானம் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை என்று கூறி கடலூர் நீதிமன்ற உத்தரவை உயர்நீதிமன்ற நீதிபதி ரத்து செய்தார்.

ex-minister

இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜனார்த்தனன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த ஜனார்த்தனனுக்கு பிரேமா என்ற மனைவியும், வக்கீல் புருஷோத்தமன், கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

இவரது மறைவுக்கு கடலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web