உயர் அழுத்த மின்கம்பி அருகே செல்போன் பேசிய இளம் பெண்.. நொடி பொழுதில் நடந்த பயங்கரம்!!

 
chennai

தாம்பரம் அருகே உயர்மின் அழுத்த கம்பி அருகே ‘பவர்பேங்’கில் சார்ஜ் போட்டு பேசியபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் உடல் கருகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சானடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் பல தனியார் நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மேற்கு தாம்பரம், கடப்பேரி, திருநீர்மலை சாலையில் உள்ள விடுதிகளில் வசித்து வருகின்றனர்.

இந்த பெண்கள் விடுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் தங்கி, மெப்ஸ் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். விடுதி அமைந்துள்ள கட்டிடத்தின் அருகில் துணை மின் நிலையத்துக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது. பெண்கள் விடுதியில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கும்கும் குமாரி (19) நேற்று காலை செல்போனில் சார்ஜ் இல்லாததால் ‘பவர் பேங்க்’ மூலம் சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

Shock

அப்போது துவைத்து காயப்போட்டு இருந்த அவரது துணிகள் உயர் அழுத்த மின்கம்பி செல்லும் பகுதியில் விழுந்து விட்டது. அந்த பகுதிக்கு செல்லும் வழியில் இருந்த கிரிலை கட்டிடத்தில் வர்ணம் பூசுவதற்காக கழட்டி வைத்துள்ளனர். கும்கும் குமாரி, பிளாஸ்டிக் சேரை போட்டு அதில் ஏறி துணியை எடுக்க சென்றார்.

செல்போனில் பேசியபடியே துணியை எடுக்க முயன்றார். அப்போது உயர் அழுத்த மின்கம்பி அருகே சென்றபோது செல்போன் கதிர்வீச்சில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து பலத்த சத்தத்துடன் செல்போன் வெடித்து சிதறியது. இதில் கும்கும் குமாரி உடலில் மின்சாரம் பாய்ந்ததால் அவர் உடல் கருகி அலறி துடித்தார். மேலும் அந்த கட்டிடம் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் பெண் விடுதியில் உள்ள அறையில் தங்கி இருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பூனம் (20), ஊர்மிளா குமாரி (24) ஆகிய மேலும் 2 பெண்களும் மின்சாரம் தாக்கியதில் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த கும்கும் குமாரியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 2 பெண்களும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tambaram-PS

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்து தொடர்பாக தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விடுதி மேலாளர் கணேஷ், கட்டிட உரிமையாளர் நடராஜ், விடுதி மேற்பார்வையாளர் தமிழ்அழகி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உயர் அழுத்த மின்கம்பி செல்லும் பகுதியில் செல்போன் பேசுவது இதுபோன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பதால் இவற்றை தவிர்க்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

From around the web