நண்பர்கள் அளித்த திருமண பரிசு... தேம்பி தேம்பி அழுத மாப்பிள்ளை!!

 
Kallakurichi

திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில், நண்பர்கள் பரிசாக அளித்த தந்தையின் உருவப் படத்தைப் பார்த்து, மாப்பிள்ள்ளை தேம்பி தம்பி அழுத சம்பவம், கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கீரி பாண்டு. இவரது மனைவி கௌரி. இந்த தம்பதியரின் மகன் அறிவழகன். தந்தை இழந்த அறிவழகனுக்கும், மதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13-ம் தேதி திருமணம் கோயில் ஒன்றில் நடைபெற்றது. கோயிலில் திருமணம் செய்த பின்னர், திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவீட்டாரின் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் வருகை தந்தனர். மணமக்களுக்கு பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து உறவினர்களும், மற்றவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், உயிரிழந்த தந்தை மீது அதீத பாசம் வைத்துள்ள அறிவழகனுக்கு, வித்தியாசமான முறையில் பரிசு அளிக்க அவரது நண்பர்கள் விரும்பினர்.

Kallakurichi

அதன்படி, அறிவழகனின் தந்தையின் உருவப் படத்தை பேனரில் அச்சடைத்து, அதனை சிறிய கட்அவுட்டாக வடிவடிமைத்து மாப்பிள்ளைக்கு பரிசாக வழங்கினர். சிறிய கட்அவுட் வடிவில் வடிவமைக்கப்பட்ட தந்தையின் உருவப் படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்ட புதுமாப்பிள்ளை அறிவழகன், திடீரென தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத பரிசு அளித்த நண்பர்கள், அவரை சமாதானம் செய்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தந்தையின் உருவ படத்தைப் பார்த்து மாப்பிள்ளை அழுத சம்பவம், மணப்பெண் உட்பட உறவினர்களும் கண் கலங்க செய்தது. இந்த செண்டிமேண்ட் நிகழ்வு, அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. தனது தந்தையின் உருவப் படத்தை சிறிய கட்அவுட்டாக வடிவமைத்து பரிசளித்த நண்பர்களுக்கு அறிவழகன் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார். தனது திருமணத்திற்கு நண்பர்கள் மூலம், தந்தையே நேரடியாக வந்து தன்னை ஆசீர்வாதம் செய்ததுபோல் உணர்ந்த மாப்பிள்ளை அறிவழகன், பரிசு அளித்த நண்பர்களை மனதார பாராட்டினார்.

Kallakurichi

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை, அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு வேகமாக பரவி, பல்வேறு தரப்பினராலும் பகிரப்பட்டு வருகிறது.

From around the web