கல்லூரி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி.. தேனியில் பரபரப்பு

 
Theni

பெரியகுளம் அருகே கல்லூரி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் லட்சிதா (19). இவர், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள திரவியம் கலை அறிவியல் கல்லூரி நிறுவனங்களுக்கு சொந்தமான செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கான விடுதி உள்ளது. இந்த விடுதியில் லட்சிதா தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

Theni

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விடுதியின் 3-வது மாடிக்கு லட்சிதா சென்றார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் அவர் திடீரென்று மாடியில் இருந்து கீழே குதித்தார். சத்தம் கேட்டு, சக மாணவிகள் பதறியடித்து கொண்டு அங்கு ஓடி வந்தனர். லட்சிதா விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார். 

உடனே கல்லூரி நிர்வாகத்தினர் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, தாசில்தார் காதர்ஷெரிப் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து தென்கரை போலீசாரும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினர். 

Thenkarai

விசாரணையில், மாணவி லட்சிதாவுக்கு கடந்த 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். அவர்கள் 2 நாட்களில் வந்து லட்சிதாவை அழைத்து செல்வதாக கூறியதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் தான், லட்சிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். விடுதி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web