மீன் தொட்டிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பலி.. சென்னையில் சோகம்!

 
Chennai

மீன் தொட்டியில் ஒன்றரை வயது பெண் குழந்தை தவறிவிழுந்து பலியான சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம், வன்னியர் தெருவில் வசித்து வருபவர் யுவராஜ். இவர் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கெளசல்யா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் மீனாட்சி என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று காலை யுவராஜ் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்ட நிலையில் மனைவியும் குழந்தையும், வீட்டில் தனியாக இருந்தனர்.

chennai

அப்போது கௌசல்யா விளையாட்டுப் பொருட்களை குழந்தை மீனாட்சியிடம் கொடுத்துவிட்டு சமையலறையில் சமைக்கச் சென்றார். பின்னர் குழந்தை மீனாட்சி தனியாக விளையாடிக் கொண்டிருந்த போது பொம்மை ஒன்று அருகில் இருந்த மீன் தொட்டியில் விழுந்து விட்டது. விளையாட்டுப் பொருளை எடுக்க குழந்தை மீனாட்சி முற்படும்பொழுது தலைக்குப்புற கவிழ்ந்து மீன் தொட்டி உள்ளே விழுந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து சமையல் முடித்துவிட்டு வெளியே வந்த கௌசல்யா குழந்தை மீனாட்சியைக் காணவில்லையே என்று அதிர்ச்சி அடைந்தார். அப்போது குழந்தை மீன் தொட்டியில் மயங்கிய நிலையில் இருந்தைக் கண்டு கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Ambattur

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்த அம்பத்தூர் போலீசார் குழந்தை மீனாட்சி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தை, மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web