உருவாகிறது புதிய ஆபத்து... வங்கக்கடலில் வரும் 27-ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு!

 
Storm

வங்கக்கடலில் வரும் 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பூமத்திய ரேகை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வரும் ஜனவரி 27ஆம் தேதி அன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

chennai-imd

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடலில் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் அடுத்த மூன்று நாட்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகர வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாகத் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட ஓரிரு இடங்களில் லேசான மழை வரும் ஜனவரி 28, 29-ம் தேதிகளில் பெய்யக்கூடும்.

Rain

அதே சமயம் சென்னை அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web