சினிமா பட பாணியில்ல தாலியை தட்டிப்பறித்த காதலன்.. காதலியின் கழுத்தில் கட்ட முயன்றதால் பரபரப்பு

 
Chennai

சினிமா பட பாணியில் காதலியின் திருமணத்தில் தாலியை தட்டிப்பறித்து கட்ட முயன்ற காதலனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகரில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மகள் ரேவதி (20). இவருக்கும் தண்டையார்பேட்டை, நேதாஜி நகரை சேர்ந்த மரைன் இன்ஜினியர் மணிகண்டன் (26), என்பவருக்கும், நேற்று காலை, நேதாஜி நகர் முருகன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. காலை 6 முதல் காலை 7.30 மணி முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது.

முகூர்த்த நேரத்தில், மணமகன் மணிகண்டன் கையில் அய்யர் தாலி எடுத்துக் கொடுத்த நிலையில், அவர் ரேவதி கழுத்தில் கட்டச் சென்றார். அப்போது திடீரென மணமேடைக்கு வந்த வாலிபர் ஒருவர், மணிகண்டன் கையில் இருந்த தாலியை பறித்து, ரேவதி கழுத்தில் கட்ட முயன்றார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை சரமாரியாக அடித்து உதைத்து அவரிடம் இருந்த தாலியை பறித்தனர். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Sathish

பின்னர், வாலிபரை ஆர்.கே.நகர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் இந்த வழக்கை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார், மணமகன், மணமகள் மற்றும் சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், தண்டையார்பேட்டை கைலாசம் தெருவைச் சேர்ந்த சதீஷ் (23), என்பது  தெரியவந்தது. மேலும் இவரும் ரேவதியும், ராயபுரத்திலுள்ள நகைக் கடையில் ஒன்றாக வேலை பார்த்துள்ளனர். அப்போது, இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. ரேவதி தன் காதலை, வீட்டில் சொல்லாமல் மறைத்துள்ளார். இந்த நிலையில், ரேவதி வீட்டில் மணிகண்டனுடன் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து சதீஷிடம் ரேவதி கூறிய போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது சதீஷ், திருமணத்தை நிறுத்தப் போவதாக சவால் விட்டுள்ளார்.

Washermenpet

இந்நிலையில், நேற்று முன்தினம் நேதாஜி நகரிலுள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்ததை, சதீஷ் நோட்டமிட்டுள்ளார். அதன்பின், காலையில் திட்டமிட்டபடி திருமணத்தை நிறுத்தியது தெரிந்தது. இதற்கிடையில், மணிகண்டன் இந்த திருமணத்தில் விருப்பமில்லை எனவும், திருமண செலவை வழங்குமாறும் கேட்க, பெண் வீட்டாரும் சம்மதித்தனர். திருமணத்தை நிறுத்திய சதீஷை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

திருமணம் நின்றுபோனதால் மண்டபத்துக்கு வந்திருந்த இருவீட்டாரின் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். நேற்று முன்தினம் திருமண வரவேற்பால் களை கட்டி இருந்த திருமண மண்டபம் நேற்று திருமணம் நின்று போனதால் களை இழந்து காணப்பட்டது.

From around the web