மது வாங்கி கொடுக்க மறுத்த நண்பன்... கத்தியால் குத்திக்கொலை செய்த 2 பேர் கைது!

 
chennai

சென்னையில் குடிக்க மது வாங்கி தர மறுத்ததால் நண்பனை அவனது நண்பர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சவுக்கார்பேட்டை ஆதியப்பன் நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் ரவி. இவர், நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள காலியிடம் ஒன்றில் தலையில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரது நண்பர் சீனிவாசன் பூக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ரவியின் தலையில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்த காரணத்தினால், சந்தேக மரணத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பூக்கடை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

murder

விசாரணையில் நேற்று சவுகார்பேட்டை ஆதியப்பன் நாயக்கன் தெரு பகுதியில் நடந்த இறுதி ஊர்வலத்தில், ரவி தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். பின்னர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்தினர். அப்போது நண்பர்கள் ரவியிடம் மீண்டும் மதுபானம் கேட்டு தகராறு செய்தனர். ஆனால் அவர் வாங்கி தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள், ரவியை கத்தி மற்றும் பாட்டிலால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவியின் நண்பர்களான சவுகார்பேட்டை முருகப்பன் தெருவைச் சேர்ந்த தீனா (எ) காக்கா தீனா (23) மற்றும் மணலி தாமரை குளம் பகுதியைச் சேர்ந்த திலிப்குமார் (21) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 17 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

arrest

தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தீனா மீது யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்கு நிலுவையில் இருக்கிறது.

From around the web