தடை செய்யப்பட்ட பகுதியில் குளிக்கச் சென்ற மருத்துவக்கல்லூரி மாணவன் பலி!

 
Nellai

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் ஜோயல் (22). இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் வெளியே சென்று பொழுதை கழிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி, தன்னுடன் படிக்கும் மாணவர்கள் 4 பேரும், மாணவிகள் 6 பேரும் என 11 பேர் வள்ளியூரை அடுத்த திருக்குறுங்குடி மலைப்பகுதியில் உள்ள நம்பி கோயிலுக்கு இன்று காலை சென்றுள்ளனர்.

பின்பு அவர்கள் நம்பி பெருமாள் கோயிலுக்கு மேலே வனத்துறையால் தடை செய்யப்பட்ட பகுதியான அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தடாகத்திற்கு சென்று குளித்துள்ளனர். அப்போது, ஜோயல் தடாகத்தில் உள்ள சிறிய பாறையில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. ஜோயலுக்கு அரைகுறையாக மட்டுமே நீச்சல் தெரிந்துள்ளதால் தடாகத்தில் குதித்த பின்பு நீரில் இருந்து அவரால் வெளியே வரமுடியவில்லை. மூழ்கிய அவரை மீட்க அவருடன் வந்த மாணவர்கள் நீரில் மூழ்கி தேடி அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

Nellai

பின்பு அவர்களிடம் இருந்த முதலுதவி மருந்துகளை வைத்து ஜோயலுக்கு முதலுதவி செய்தனர். இருப்பினும் ஜோயல் நீரில் மூழ்கி அதிகளவில் தண்ணீர் குடித்ததால் உயிரிழந்து விட்டார். இதையடுத்து மாணவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து அவர்களுடன் மாணவன் உயிரிழந்த பகுதிக்கு சென்றனர்.

பின்பு மாணவனை கம்பில் துணி கொண்டு கட்டி, சுமார் 2 கி.மீ. மலைப்பகுதியில் நீர் வழித்தடத்திலேயே சுமந்து கொண்டு வந்தனர். பின்பு நம்பி கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரது உடலை ஏற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருகுறுங்குடி போலீசார் அவருடன் சென்ற மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nellai

விசாரணையில் இன்று விடுமுறை தினம் என்பதால் குளிப்பதற்காக புதிய இடத்தை இன்டர்நெட்டில் தேடிய போது இந்த இடம் தெரிய வந்ததாகவும் ஆகையால் குளிக்க சென்றதாகவும் கூறினர். வனத்துறையிடம் கேட்டபோது கீழ் கேட்டில் இவர்கள் அனைவரும் நம்பி கோயிலில் குளிப்பதற்காக டிக்கெட் எடுத்து சென்றதாகவும் அதன் மேல்பகுதியில் செல்லக்கூடாது என முன்னரே அறிவுறுத்தியதாகவும் வனத்துறை சார்பில் கூறப்படுகிறது. வேறு மாநிலத்தில் இருந்து மருத்துவக் கனவை சுமந்து வந்த மாணவன் விடுமுறை தின கொண்டாட்டத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web